அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம் - கோவையில் புகழேந்தி பேட்டி
அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம் என்று கோவையில் புகழேந்தி கூறினார்.
கோவை,
கோவை மண்டலத்தில் அ.ம.மு.க. வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் மற்றும் சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா கோவை மசக்காளிபாளையத்தில் நேற்று நடந்தது. கணேஷ்குமார் தலைமை தாங்கினார். கோவை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். பொற்காலம் ராஜா வரவேற்றார். இதில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகி புகழேந்தி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் டி.டி.வி.தினகரனை கண்டித்தும், அவர் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், நதிநீர் பிரச்சினையை தீர்க்க கேரள முதல்-மந்திரியை சந்தித்து பேசிய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதாக சூளுரைத்த டி.டி.வி.தினகரனால் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. அவரிடம் கட்சியை நடத்தும் பக்குவம் இல்லாததால் அவருடன் இருந்தவர்கள் பலர் வெளியேறி விட்டனர். மேலும் அவர் பலரை நீக்கம் செய்துவிட்டதாக அறிவித்து இருக்கிறார். அந்த அறிவிப்பு எதுவும் செல்லாது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியபோது அதற்காக எந்த நடவடிக்கையையும் டி.டி.வி.தினகரன் எடுக்கவில்லை. உடன் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோக காரணமாக இருந்த அவர், உடனடியாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் எப்படி எல்லாம் பணத்தை விரயம் செய்தார் என்பது எனக்கு தெரியும். எனவே அவருடைய குடுமி எனது கையில் உள்ளது. வெளியே சொன்னால் உடனடியாக வருமானவரித்துறை அதிகாரிகள் வந்து விடுவார்கள். எனவே எப்போது சொல்ல வேண்டுமோ அப்போது கண்டிப்பாக வெளியே சொல்வேன்.
இனிமேல் டி.டி.வி.தினகரனால் சசிகலாவிடம் பணம் வாங்க முடியாது. சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்தால் அவர் அ.தி. மு.க.வைதான் ஆதரிப்பார் என்பது எனது கருத்து. அவர் கட்சி மற்றும் ஆட்சியை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர்.
எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க.வை ஜெயலலிதா வளர்த்தார். ஆனால் டி.டி.வி.தினகரன் இரட்டைஇலை சின்னத்தை கொச்சைப்படுத்தி வருகிறார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டனர். எனவே அந்த கட்சிக்கும், ஆட்சிக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற சிப்பாய்களாகவும் செயல்படுவோம்.
அதற்காக நாங்கள் அ.தி.மு.க.வில் இணையபோகிறோம் என்று கூறவில்லை. இன்னும் 10 நாட்களில் எங்களது முடிவை கூறுவோம். நான் ஒருபோதும் பா.ஜனதாவில் சேரமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் இளைஞர் அணியை சேர்ந்த ராமநாதபுரம் புவனேஷ்வரன், அம்சவேணி, முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story