ஆயுத பூஜையையொட்டி தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது
தூத்துக்குடியில் ஆயுத பூஜையையொட்டி பூமார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஆயுத பூஜையையொட்டி பூமார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுதபூஜை
நவராத்திரி விழாவின் கடைசி நாள் ஆயுதபூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி பூஜை பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நேற்று மார்க்கெட்டில் குவியத் தொடங்கினர். ஆயுதபூஜையின் போது, வாழைக்கன்றுகள், தோரணங்கள் கட்டியும் கொண்டாடுவது வழக்கம். இதனால் மார்க்கெட்டில் வாழைக்கன்றுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதே போன்று கொண்டைகடலை, பருப்பு உள்ளிட்டவைகளையும் வாங்கி சென்றனர்.
பூ விலை
இதே போன்று பூமார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500 முதல் ரூ.1000 வரையும், பிச்சிப்பூ ரூ.500 முதல் ரூ.900 வரையும், கலர் பிச்சிப்பூ ரூ.400-க்கும், செண்டுப்பூ ரூ.100 முதல் ரூ.120 வரையும், பட்டன்ரோஸ் ரூ.200-க்கும், மரிக்கொழுந்து ரூ.150-க்கும், செவந்தி ரூ.150-க்கும், பச்சை ரூ.40 முதல் ரூ.70 வரையும், சேவல் பூ ரூ.70 முதல் ரூ.120 வரையும், அரளி ரூ.300-க்கும் விற்பனையானது.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும் போது, மக்கள் தற்போது முன்கூட்டியே பூக்களை வாங்கி பிரிட்ஜில் வைத்து விடுகின்றனர். இதனால் விழாக்காலங்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான நெருக்கடி தற்போது ஏற்படவில்லை. விலையேற்றமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. சராசரியாக வியாபாரம் நடக்கிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story