தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள மாரிக்குளம் சுடுகாட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்


தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள மாரிக்குளம் சுடுகாட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 Oct 2019 10:45 PM GMT (Updated: 6 Oct 2019 7:18 PM GMT)

தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள மாரிக்குளம் சுடுகாட்டை சீரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பூக்காரத்தெரு பகுதியில் உள்ளது மாரிக்குளம் சுடுகாடு. இந்த சுடுகாடு தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சுடுகாட்டில் மக்கள் அமர்வதற்கான கட்டிடம், கழிவறைவசதி உள்ளது. சுடுகாட்டின் மையப்பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்டு தடுப்புச்சுவரும் கட்டப்பட்டுள்ளது.

சுடுகாட்டில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக செங்கற்கள் பதிக்கப்பட்ட நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சி 45-வது வார்டில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சுடுகாட்டை 42, 43, 45, 46, 47, 48, 49, 50 ஆகிய 8 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் புதுப்பட்டினம், விளார், நாஞ்சிக்கோட்டை ஆகிய 3 ஊரட்சிகளை சேர்ந்த பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இருப்பினும் சுடுகாட்டின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் உடைந்தும், சுற்றிலும் சீமைக்கருவேல மரங்கள், புதர்கள் மண்டியும் காணப்பட்டது. புதர்கள் மண்டிக்கிடந்த இடத்தை சீரமைக்க வேண்டும். வடக்கு, கிழக்கு பகுதியில் சுற்றுச்சுவர் அமைத்து நுழைவுவாசலில் கேட் அமைத்து தர வேண்டும். மேற்கு பகுதியில் உள்ள சுவரை உயர்த்தி கட்டித்தர வேண்டும். இறுதி சடங்கு செய்ய வருபவர்களுக்கு குளிக்க தண்ணீர் தொட்டி கட்டி கொடுக்க வேண்டும்.

பழுதடைந்துள்ள கழிவறையை சீர் செய்து கட்டண கழிவறையாக அமைத்து கொடுக்க வேண்டும். உயர்கோபுர மின் விளக்கு அமைத்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

புதர்களை அகற்றினர்

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாரிகுளம் சுடுகாடு சீரமைப்பு குழுவை ஏற்படுத்தி, அவர்களே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து சுடுகாட்டை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அகற்றினர். சீரமைக்கருவேல மரங்களையும் வெட்டி அகற்றினர்.

மேலும் சுடுகாட்டில் தண்ணீர்வசதி, மின்விளக்கு வசதி, கழிவறை வசதி ஏற்படுத்தி, சுற்றுச்சுவர் கட்டுதல், மரம் வளர்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு கல்லறை தோட்டத்தை அழகுபடுத்தவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “ சுடுகாட்டில் நாங்களே சீரமைப்பில் ஈடுபட்டாலும், மாநகராட்சி நிர்வாகமும் இதில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை உடனடியாக செய்து தர வேண்டும்”என்றனர்.

Next Story