தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினத்தில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் 3 நாட்களுக்கு அமல்
தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
போக்குவரத்து மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பையும், வசதியையும் கருத்தில் கொண்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று(திங்கட்கிழமை) முதல் நாளை மறுநாள்(புதன்கிழமை) இரவு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து வாகனங்களும் அந்தந்த பகுதியில் இருந்து வரும் தடத்தை பொறுத்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள ஒருவழிப்பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு வந்து திரும்பி செல்ல வேண்டும்.
அதன்படி தூத்துக்குடி, நெல்லை மார்க்கத்தில் இருந்து திருச்செந்தூர் வழியாக குலசேகரன்பட்டினத்துக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும் திருச்செந்தூர் முருகா மடம் சந்திப்பு வழியாக, ஆலந்தலை, கல்லாமொழி சென்று குலசேகரன்பட்டினம் கார்த்திகேயன் காம்ப்ளக்ஸ் எதிரில் நிறுத்த வேண்டும். மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பி வந்து திருச்செந்தூர் முருகாமடம், அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள ரோடு வழியாக திருச்செந்தூர் பஸ்நிலையத்தை வந்தடையும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் சில மாறுதல்கள் செய்யப்படும்.
தற்காலிக பஸ்நிலையம்
திசையன்விளை, தட்டார்மடம் சாத்தான்குளம் மார்க்கத்தில் இருந்து வரும் அரசு பஸ்கள் தேரியூர், உடன்குடி பஸ் நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு, குலசை பைபாஸ் ரோடு சந்திப்பு அருகே அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக பஸ் நிலையத்துக்கு வந்து நிற்க வேண்டும். கன்னியாகுமரி, உவரி மார்க்கமாக வரும் அரசு பஸ்கள் குலசை-மணப்பாடு கடற்கரை சாலையில் தீதத்தாபுரம் விலக்கில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்த வேண்டும்.
தனியார் வாகனங்கள்
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வழியாக வரும் தனியார் வாகனங்கள், திருச்செந்தூர் முருகா மடம் சந்திப்பு வழியாக பரமன்குறிச்சி, தைக்காவூர், சிதம்பர தெரு சந்திப்பு, காலான்குடியிருப்பு, உடன்குடி, குலசை ரோடு- தருவை சந்திப்பு அருகே அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். மீண்டும் திரும்பும் போது, தருவைரோடு வழியாக கடற்கரை சாலையில் திருச்செந்தூர் முருகாமடம் சந்திப்பு, அரசு ஆஸ்பத்திரி பின்புற சாலை வழியாக, நெல்லை ரோட்டில் உள்ள ராணிமகராஜபுரம், சண்முகபுரம் ரெயில்வே கேட் அல்லது நல்லூர் விலக்கு வழியாக டி.சி.டபிள்யூ. சந்திப்பு வழியாக தூத்துக்குடிக்கு செல்ல வேண்டும். திசையன்விளை, சாத்தான்குளம் மார்க்கத்தில் இருந்து வரும் தனியார் வாகனங்கள் தேரியூர் விலக்கு, செட்டியாபத்து சாலை, உடன்குடி பஸ்நிலையம் வழியாக குலசைரோடு-தருவைகுளம் சந்திப்பில் உள்ள தற்காலிக வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். திரும்பும் போது, கொட்டங்காடு சாலை வழியாக திசையன்விளை ரோட்டில் செல்ல வேண்டும்.
கன்னியாகுமரி மார்க்கத்தில் வரும் தனியார் வாகனங்கள் மணப்பாடு சந்திப்பு சோதனை சாவடி அருகே பிரியா கியாஸ் குடோன் பின்புறம் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். திரும்பும் போது, அதே மார்க்கத்தில் கன்னியாகுமரி நோக்கியோ அல்லது தீதத்தாபுரம் சாலை வழியாக திசையன்விளை நோக்கியோ செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
நெல்லை மார்க்கத்தில் இருந்து வரும் தனியார் வாகனங்கள் காந்திபுரம் விலக்கு வழியாக காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி பஸ் நிலையம் வழியாக குலசை ரோடு-தருவைகுளம் சந்திப்பு தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். திரும்பும் போது, தருவை ரோடு சந்திப்பு, கல்லாமொழி, ஆலந்தலை வழியாக திருச்செந்தூர் செல்ல வேண்டும்.
கண்காணிப்பு
குலசேகரன்பட்டினம் மற்றும் உடன்குடி சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களுடன், தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்படடு கண்காணிக்கப்படுகிறது. திறந்த வாகனங்களில் அசாதாரண சூழலில் பக்தர்களை ஏற்றி வந்தால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாதி சின்னங்களுடன் கூடிய உடைகளை அணிந்து வரக்கூடாது. அதிக சத்தத்துடன் டிரம் அடித்து ஒலி எழுப்பி சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தினாலோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் கடற்கரை, வாகன நிறுத்தங்கள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் மறைவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அல்லது சிறு வியாபாரிகள் உரிய அனுமதியின்றி சாலையோரம் சட்டவிரோத கடைகள் அமைத்தோ, வேறுவிதமாகவோ பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் முன் அனுமதி இன்றி திருவிழா சம்பந்தமாக கோவில் பகுதிகள் மற்றும் பொது இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தவோ, ஆடல், பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகளோ எந்தவிதமான கலை நிகழ்ச்சிகளோ, ராட்டினங்கள் அமைத்து தொழில் செய்யக்கூடாது. மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு வழிப்பாதை
கோவிலுக்கு வரும் தசரா குழுக்கள், பக்தர்கள் தருவைகுளம் சந்திப்பில் இருந்து கருங்காலயம்மன் கோவில், தாயம்மாள் பள்ளி வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டும். தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ரத்தின காளியம்மன் கோவில் சந்திப்பில் இருந்து தொடங்கி திருவருள் பள்ளி, காவலர் குடியிருப்பு பின்புறம் வழியாக வர ஒரு வழிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மாற்றுப் பாதையில் செல்ல அனுமதியில்லை.
கோவிலுக்குள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக டிரம்செட் மேள தாளங்கள் முழங்க கூடாது. கோவில் நுழைவு வாயிலுக்கு வந்த உடன் தாளங்களை நிறுத்தி விட வேண்டும். மீறினால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கடற்கரையில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் ஒரு வழிப்பாதையாக சிதம்பரேசுவரர் கோவில் தெரு, கச்சேரி தெரு வழியாக போலீஸ் நிலையம் வந்து உடன்குடி பைபாஸ் சந்திப்பு செல்ல வேண்டும். போலீஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story