கரூர் காவிரி-அமராவதி ஆறுகளில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்


கரூர் காவிரி-அமராவதி ஆறுகளில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 7 Oct 2019 4:15 AM IST (Updated: 7 Oct 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

கரூர் காவிரி-அமராவதி ஆறுகளில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

கரூர் கிழக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று வாங்கலில் நடந்தது. இதற்கு மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.ம.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்டிட வேண்டும்.

சாலை விரிவாக்க பணிக்கு பிறகு மண்மங்கலம்-வாங்கல் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைத்திட வேண்டும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முழுவதுமாக தூர்வார வேண்டும், கரூர் காவிரி-அமராவதி ஆற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும், திருப்பூர் அமராவதி அணையில் நீர் திறக்கப்படும் போது அது கரூர் திருமுக்கூடலூர் கடைமடை பகுதி வரை செல்கிறதா? என உறுதி செய்ய வேண்டும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

கரூர் மனோகரா கார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதால் அங்கு பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கரூர் பஸ் நிலையத்தை விரிவுப்படுத்தி நவீனப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர் மஞ்சுநாதன், மாவட்ட இளைஞரணி நிர்வாகி சதீஷ்குமார், மண்டல விவசாய அணி நிர்வாகி பொன்னுசாமி உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story