குமரியில் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம் இன்னிசை கச்சேரிகளுக்கு கட்டுப்பாடு


குமரியில் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம் இன்னிசை கச்சேரிகளுக்கு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 7 Oct 2019 4:15 AM IST (Updated: 7 Oct 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் போது இன்னிசை கச்சேரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதே போல குமரி மாவட்டத்திலும் ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. வீதிகளிலும், சாலை ஓரங்களிலும் ஒலி பெருக்கி வைக்கப்பட்டு பாடல்கள் இசைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தொழில் நிறுவனங்கள், கடைகள், ஆட்டோ, கார் மற்றும் வேன் நிறுத்தங்களில் ஆயுத பூஜைக்கான ஆயத்த பணிகள் நேற்று மாலை தொடங்கின. அதாவது கடைகள், தொழில் நிறுவனங்களில் உள்ள எந்திரங்களை சுத்தம் செய்தனர்.

மேலும் சந்தனம், குங்குமம் வைத்து பூஜைகள் செய்வதோடு சுண்டல், பொரிகடலை, பூக்கள் உள்ளிட்டவற்றை இன்று சாமிக்கு படைத்து வணங்குவார்கள். இதனால் பொரிகடலை மற்றும் பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது.

இன்னிசை கச்சேரி

இதே போல அரசு அலுவலகங்கள், போக்குவரத்து கழகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களிலும் ஆயுத பூஜை விழா இன்று காலை நடக்கிறது. இதற்காக போலீஸ் நிலையங்களில் உள்ள துப்பாக்கிகளை போலீசார் சுத்தம் செய்து பூஜைக்கு தயார்படுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை அன்று குமரி மாவட்டம் முழுவதும் கார் மற்றும் ஆட்டோ நிறுத்தங்களில் இன்னிசை கச்சேரி நடத்தப்படுவது வழக்கம். அதுபோன்று இந்த ஆண்டும் இன்னிசை கச்சேரி நடத்துவதற்கு மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நாகர்கோவிலை பொருத்த வரையில் வேப்பமூடு சந்திப்பு உள்பட சில இடங்களில் இன்னிசை கச்சேரி நடைபெறும். ஆனால் கச்சேரிகள் நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

கட்டுப்பாடுகள்

அதாவது கச்சேரியில் சத்தம் குறைவாக இருக்க வேண்டும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் கச்சேரி நடத்த வேண்டும், அதோடு முக்கியமாக இரவு 10 மணிக்கு மேல் கச்சேரி நடத்த கூடாது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் போலீஸ் அனுமதியின்றி எந்த நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய 2 நாட்களும் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story