ரூ.20 கோடி பேரத்துக்கு பிறகே நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கியது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேச்சு


ரூ.20 கோடி பேரத்துக்கு பிறகே நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கியது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 7 Oct 2019 4:45 AM IST (Updated: 7 Oct 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

ரூ.20 கோடி பேரத்துக்கு பிறகே நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கியது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

ராஜபாளையம், 

ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நகர செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

ராதாபுரம் தேர்தல் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப் பற்றி பேசக்கூடாது. ஆனால் ஸ்டாலின் அதைப்பற்றி பேசுகிறார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்டாயம் வெற்றி பெறாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு ஏமாற்று வாக்குறுதிகளை நம்பி மட்டுமே மக்கள் வாக்களித்துள்ளனர். யாரும் தி.மு.க.வுக்கு விரும்பி வாக்களிக்கவில்லை.

தேர்தல் பிரசாரத்தில் சாதி ரீதியாக பேசி வாக்குகளை வாங்கி உள்ளனர். வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் மத ரீதியாக பேசி வாக்குகளை வாங்கி உள்ளனர். இதை நாங்கள் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விழிப்புடன் உள்ளோம். நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெளியூரை சேர்ந்தவர். ஆனால் அ.தி. மு.க. வேட்பாளர் உள்ளூரை சேர்ந்தவர்.

தி.மு.க.வில் பணம் தான் பிரதானம். அ.தி.மு.க.வை பொறுத்தவரை உழைப்புக்கு மட்டுமே மரியாதை. 20 கோடி ரூபாய் பேரம் பேசித்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மக்கள் பிரதிநிதி ஆகும் தகுதி கிடையாது. சோனியா காந்தி வெளிநாட்டில் பிறந்தவர் என்பதை கூறியதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கவலை இல்லை.

திருச்சி வேலுச்சாமி என்பவர் ஜெயலலிதாவை வெளிநாட்டில் பிறந்தவர் என தெரியாமல் கூறினார். ஜெயலலிதா தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். வெளிநாட்டில் 15 வருடங்கள் இருந்தால் குடியுரிமை பெறலாம். தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆகலாம். ஆனால் அதிபராக முடியாது. அதன்படி இந்தியாவை சேர்ந்த மோடி மட்டுமே பிரதமராக தகுதி பெற்றவர்.

பதவி என்பது உழைப்பவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். பணத்தை எடை போட்டு பதவி வழங்கக் கூடாது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி. மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு பலமாக உள்ளது. தி.மு.க.வுக்கு மக்கள் பணியாற்றும் எண்ணம் கிடையாது. பதவி சுகத்தை அனுபவிக்கவே ஆசைப்படுகின்றனர்.

ராஜபாளையம் பகுதிக்கு சுமார் ரூ.700 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை பொதுமக்களுக்கு பயந்து பணியாற்றுவோம். ஆனால் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அதிகாரம் கிடைத்தவுடன் மக்களுக்கு எந்த ஒரு நலத்திட்டமும் செய்ய மாட்டார்கள். நெல்லை உமா மகேஸ்வரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தி.மு.க.வை சேர்ந்தவர்.

தி.மு.க. ஆட்சி நடைபெற்ற காலங்களில் பல்வேறு இடங்களில் சாதி சண்டைகள் நடைபெற்றுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகமும், பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவும் அமைதிப் பூங்காவாக உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா, முன்னாள் அமைச்சர் இன்பதமிழன்,கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் வனராஜ், மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் கந்தகிருஷ்ணகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், விவசாய கூட்டுறவு சங்க தலைவர் செல்வசுப்பிரமணியராஜா, சேத்தூர் பேரூர் நிர்வாகிகள் பட்டுராஜான், பொன்ராஜ், சேத்தூர் நகர செயலாளர் செல்வகுமார், செட்டியர்பட்டி நகர செயலாளர் அங்குதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மேற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி நன்றி கூறினார்.

முன்னதாக அ.தி.மு.க.வின் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

Next Story