ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்காவிட்டால் ‘கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்’ - ஆதித்தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் பேட்டி
ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று ஆதித்தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் கூறினார்.
ஈரோடு,
ஆதித்தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ஜக்கையன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்தில் மேற்கு மண்டல பகுதிகளில் அருந்ததியர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். எனவே அரசியல் துறையில் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் ஆணவ படுகொலை நடந்து வருகிறது. இதை தடுக்க அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
ஈரோடு மாநகர் பகுதியில் அம்பேத்கர் சிலை மற்றும் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் சிலையை வைக்கக்கோரி நீண்டகாலமாக போராட்டம் நடந்து வருகிறது. எனவே அரசு உடனடியாக பரிசீலனை செய்து சிலைகள் அமைக்க வேண்டும். இல்லையென்றால் அம்பேத்கர் நினைவு நாளான வருகிற டிசம்பர் மாதம் 6-ந்தேதி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
தமிழகத்தில் ரெயில்வே துறையில் வெளி மாநிலத்தவர்கள் தான் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறதோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட 12½ லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் தனியார்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே அதை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஈரோடு மாநகர் பகுதியில் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை உரியவர்களுக்கு உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story