ஆசனூரில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஆசனூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தாளவாடி,
தாளவாடியை அடுத்து உள்ள கிராமம் ஆசனூர். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு பழமையான கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த அங்கன்வாடி மையத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்த கட்டிடம் பழமையான கட்டிடமாக இருப்பதால் அதன் சுவர்களில் பல இடங்களில் கீறல் விழுந்து காணப்படுகிறது. மேலும் இந்த கட்டிடத்தின் அருகில் குளம்போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘அங்கன்வாடி மைய கட்டிடம் கீறல் விழுந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் முன்பு அந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story