தொடர் மழை எதிரொலி: திராட்சை பழங்களில் அழுகல் நோய் பாதிப்பு - விவசாயிகள் கவலை
கொடைரோடு பகுதியில் தொடர் மழை காரணமாக திராட்சை பழங்களில் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நிலக்கோட்டை,
நிலக்கோட்டை தாலுகா சிறுமலை அடிவார பகுதிகளான கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காந்திகிராமம், பெருமாள்கோவில்பட்டி, காமலாபுரம், கோட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்த பகுதிகளில் திராட்சை விளைவது குறிப்பிடத்தக்கது.
இங்கு விளையும் கருப்பு திராட்சை மருத்துவக்குணம் கொண்டது. இந்த நிலையில் தற்போது இந்த பகுதிகளில் திராட்சை அறுவடை செய்யும் நிலையில் இருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக திராட்சை பழங்களில் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கொடிகளிலேயே திராட்சை பழங்கள் அழுகி உதிர்ந்து வருகிறது. அறுவடை செய்யும் நேரத்தில் அழுகல் நோய் பாதிப்பால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் கவலை அடைந்துள்ளனர். மேலும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அழுகல் நோய் பாதிப்பால் திராட்சையை கொள்முதல் செய்யவும் வியாபாரிகள் தயங்குகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,‘இந்த பகுதியில் விளையும் திராட்சை மருத்துவ குணம் நிறைந்தது. புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய மகத்துவம் திராட்சையில் இருக்கிறது. ஆனால் திராட்சையை ஒரு வாரம் வைத்து விற்பனை செய்ய முடியாது. தற்போது தொடர் மழை காரணமாக திராட்சை பழங்களில் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும் திராட்சை பழங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இந்த பகுதியில் குளிர் பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story