ஊட்டி ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை


ஊட்டி ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2019 4:00 AM IST (Updated: 7 Oct 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ஏரியில் பிளாஸ்டிக் பொருட்கள் மிதக்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

ஊட்டியில் பிரதான கால்வாயாக கோடப்பமந்து கால்வாய் உள்ளது. மழைக்காலங்களில் மேல் கோடப்பமந்து, கீழ் கோடப்பமந்து, சேரிங்கிராஸ், கிரீன்பில்டு மணிக்கூண்டு வழியாக கால்வாயில் தண்ணீர் ஓடி ஊட்டி ஏரியில் கலக்கிறது. இந்த கால்வாய்க்கு பல்வேறு இடங்களில் இருந்து பெருக்கெடுத்து தண்ணீர் வருகிறது. இதனால் பலத்த மழையின் போது கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் ஏரியில் ஆங்காங்கே மிதந்த வண்ணம் உள்ளது. இதனால் ஏரியின் கரையோரத்தில் எங்கு பார்த்தாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களாகவே காணப்படுகிறது.

கால்வாயில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சில இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இருந்தாலும், ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கனமழை பெய்யும் சமயத்தில் அவை அடித்து செல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. ஊட்டி படகு இல்லத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வலை மூலம் கரையோரத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளை அவ்வப்போது அகற்றி தூய்மை படுத்தினாலும் அவை குறைந்தபாடில்லை. இதுபோன்ற சம்பவத்தால் ஏரி தண்ணீர் மாசடைவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டியில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், இன்னும் அதன் பயன்பாடு இருந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு ஒரு காலத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கிய தற்போதைய ஊட்டி ஏரியில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உதாரணம். ஏரியில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகிறார்கள். அவர்கள் ஏரியின் அவலநிலையை பார்த்து மனம்நொந்து கொள்கின்றனர். எனவே, ஊட்டி ஏரியில் பிளாஸ்டிக் பொருட்கள் கலக்காமல் இருக்கவும், ஏரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நீலகிரி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story