கூடலூர் ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பிணமாக மீட்பு
கூடலூர் ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
கூடலூர்,
கூடலூரில் உள்ள புளியம்வயல் பகுதியை சேர்ந்த ராமுண்ணி மகன் ராஜேஷ்(வயது 28). இவர் கடந்த மாதம் 10-ந் தேதி இரவு 8 மணிக்கு கூடலூரில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அங்குள்ள பாண்டியாற்றின் கரையோரம் நடந்து செல்லும்போது, மண் திட்டு இடிந்து விழுந்தது. இதனால் ராஜேஷ் கால் தவறி ஆற்றுக்குள் விழுந்தார்.
இதை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் விரைந்து வந்த அவர்களால், பாண்டியாற்றில் விழுந்த ராஜேஷை உடனடியாக மீட்க முடியவில்லை.
மேலும் வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால், ஆற்றில் இறங்கி தேடுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது.
இதனால் அவரை தேடும் பணி பல நாட்களாக நடைபெற்றது. ஆனால் ராஜேஷ் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இறுதியாக தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பாண்டியாற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதாக தேவாலா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது ஆற்றில் விழுந்து காணாமல் போன ராஜேஷின் உடல் என்பது தெரியவந்தது. மேலும் உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story