வால்பாறை அருகே, அரசு பள்ளியில் சத்துணவுக்கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானை


வால்பாறை அருகே, அரசு பள்ளியில் சத்துணவுக்கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 6 Oct 2019 10:00 PM GMT (Updated: 6 Oct 2019 9:41 PM GMT)

வால்பாறை அருகே அரசு பள்ளியில் உள்ள சத்துணவுக்கூடத்தை காட்டு யானை சேதப்படுத்தியது.

வால்பாறை, 

பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் பெரியார்நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு சத்துணவுக்கூடம் மூலம் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் யானை ஒன்று வெளியேறியது. இந்த யானை உருளிக்கல் எஸ்டேட் பெரியார் நகர் பகுதியில் உலா வந்தது. பின்னர் அந்த யானை திடீரென, அந்தப்பகுதியில் பள்ளிக்கூடத்தில் உள்ள சத்துணவுக்கூட ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் சத்துணவுக்கூடத்தில் இருந்து பொருட்களை காட்டு யானை துதிக்கையால் எடுத்து தின்றதோடு அட்டகாசம் செய்தது.

மேலும் பள்ளிக்கூடத்தில் உள்ள கதவுகளையும் சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து சென்று கிராமப்பகுதிக்குள் புகுந்தது. அப்போது யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தனர். இதில் தெருவில்காட்டு யானை நிற்பதை கண்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து மானாம்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அந்த யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வால்பாறை அருகே சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள உருளிக்கல் எஸ்டேட் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. இதன்காரணமாக தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட அச்சப்படுகிறார்கள். அதனால் அட்டகாசம் செய்து வரும் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மானாம்பள்ளி வனத்துறையினர் முகாம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story