மாங்காட்டில் வடமாநில வாலிபர் குத்திக்கொலை உறவினர் கைது


மாங்காட்டில் வடமாநில வாலிபர் குத்திக்கொலை உறவினர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2019 3:17 AM IST (Updated: 7 Oct 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

மாங்காட்டில் வடமாநில வாலிபர் கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தவர்கள் அஜய்குமார் (வயது 19). சுனில் கோண்ட்(21). இவர்கள் இருவரும் உறவினர்கள். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் மேலும் சிலரும் அங்கு தங்கி வேலை பார்த்தனர். நேற்று முன்தினம் இரவு மது குடித்து கொண்டிருந்த போது அஜய்குமார், சுனில் கோண்ட் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சுனில் கோண்ட் அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அஜய்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் அஜய்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அஜய்குமாரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அஜய்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையில் சென்ற போலீசார் இறந்து கிடந்த அஜய்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுனில் கோண்ட்டை மாங்காடு போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அஜய்குமாரின் சகோதரியை சுனில் கோண்ட்க்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சுனில் கோண்ட் மது குடிக்கும் பழக்கம் உடையவர். ஆகவே அவருக்கு எப்படி தனது சகோதரியை திருமணம் செய்து வைக்க முடியும் என்று அஜய்குமார் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுனில் கோண்ட் கத்திரிக்கோலால் அஜய்குமாரை குத்திக்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story