காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்


காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:00 PM GMT (Updated: 6 Oct 2019 9:50 PM GMT)

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் முழுமையாக அரசு அலுவலர்கள் ஈடுபட வேண்டும் என்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ராமன் கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காய்ச்சல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், அரசு ஆஸ்பத்திரி டீன் திருமால்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் மற்றும் தனியார் டாக்டர்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை முற்றிலும் தடுக்கும் வகையில் ஒவ்வொரு வட்டாரங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் தீவிர காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

நிலவேம்பு குடிநீர்

ஒவ்வொரு வட்டாரத்திலும் மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு காய்ச்சல் கண்காணிப்பு, கொசுப்புழு ஒழிப்பு பணி, புகை மருந்து அடிக்கும் பணி மற்றும் குளோரினேசன் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. கொசு ஒழிப்பு குழுவுடன் 4 அல்லது 5 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து வீடுகள் தோறும் நேரில் சென்று மக்களுக்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சலுக்காக மூன்று வகையாக தனி படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டு காய்ச்சல் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீர் மருத்துவ முகாம்களிலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

ஒத்துழைப்பு

தற்போது ஏற்பட்டுள்ள பருவகால மாற்றம் மற்றும் மழையின் காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு உரிய தகவல்களை வழங்கிட வேண்டும்.

பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து டெங்கு காய்ச்சலை தடுத்திட முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும். டெங்கு கொசுப்புழுக்கள் உருவாக கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலும் சுத்தப்படுத்திட அறிவுறுத்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.


Next Story