2-வது நாளாக மரங்கள் வெட்டும் பணி தீவிரம் ஆரேகாலனியில் பிரகாஷ் அம்பேத்கர் நுழைய முயன்றதால் பரபரப்பு
ஆரேகாலனியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2-வது நாளாக மரங்கள் வெட்டப்பட்டன. அங்கு பிரகாஷ் அம்பேத்கர் செல்ல முயன்றதால் பரபரப்பு உண்டானது.
மும்பை,
ஆரேகாலனியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2-வது நாளாக மரங்கள் வெட்டப்பட்டன. அங்கு பிரகாஷ் அம்பேத்கர் செல்ல முயன்றதால் பரபரப்பு உண்டானது.
ஆரேகாலனியில் போராட்டம்
மும்பையில் கொலபா-பாந்திரா-சீப்ஸ் இடையே செயல்படுத்தப்படும் 3-வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தின் பணிமனை பசுமை நிறைந்த ஆரேகாலனியில் அமைய உள்ளது. இதற்காக அங்குள்ள 2,700 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மும்பை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே அங்கு மரங்களை வெட்டும் பணியில் மும்பை மெட்ரோ ரெயில் கழகம் இறங்கியது.
இதையறிந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆரேகாலனியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து சிவசேனாவினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இருப்பினும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மரங்கள் வெட்டப்பட்டன.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதற்காக ஆரேகாலனிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உண்டானது. அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
பிரகாஷ் அம்பேத்கரால் பரபரப்பு
மேலும் சிவசேனா பெண் பிரமுகர் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரேகாலனியில் மரங்களை வெட்டும் பணி தீவிரமாக நடந்தது. மரங்கள் வெட்டப்படும் பகுதியில் யாரும் நுழைந்து விடாமல் இருப்பதற்காக ஆரேகாலனிக்குள் வரும் 5 முக்கிய பாதைகள் மூடப்பட்டன.
போலீசார் அங்கு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சட்டமேதை அம்பேத்கரின் பேரனும், வஞ்சித் பகுஜன் அகாடி தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் அங்கு வந்தார். அவர் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆரேகாலனி பகுதிக்குள் நுழைய முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இந்த நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு போலீசார் அவரை விடுவித்தனர்.
Related Tags :
Next Story