அ.தி.மு.க.வினரின் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.வினரின் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லையில் திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
நெல்லை,
திருநாவுக்கரசர் எம்.பி. இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி, திமு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மதசார்பற்ற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மதி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கினார்கள். அந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அதே கூட்டணி இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது.
விக்கிரவாண்டியில் தி.மு.க. வேட்பாளரும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் வெற்றி பெறுவார்கள். நான் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு இரவு 10 மணி அளவில் வந்து கொண்டு இருந்தேன். நாங்குநேரி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் சுமார் 400–க்கும் மேற்பட்ட கார்கள் நின்று கொண்டு இருந்தன. தேர்தல் பிரசாரத்துக்கே 4 கார்கள் மேல் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
இரவு நேரத்தில் இத்தனை கார்கள் நிற்க வேண்டிய அவசியம் என்ன? அங்கு பணப்பட்டுவாடா செய்வது போல் தெரிகிறது. இதுபற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. அ.தி.மு.க.வினரின் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுக்கப்படும்.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பி வந்தபோது பல ஆயிரம் கோடி நிதியில் தமிழகத்தில் தொழில் தொடங்கப்படும் என்று கூறினார். இதுவரை எந்த தொழில் தொடங்குவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. இதுபற்றி விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
பேட்டியின் போது, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மேற்கு மாவட்ட பொருளாளர் முரளிராஜா, மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story