சுருக்குமடி வலைக்கான தடையை நீக்கக்கோரி மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டம் - மீனவர் வாழ்வுரிமை இயக்க கூட்டத்தில் தீர்மானம்


சுருக்குமடி வலைக்கான தடையை நீக்கக்கோரி மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டம் - மீனவர் வாழ்வுரிமை இயக்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Oct 2019 4:00 AM IST (Updated: 9 Oct 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

சுருக்குமடி வலைக்கான தடையை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கடலூரில் நடந்த மீனவர் வாழ்வுரிமை இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர்,

மீனவர் வாழ்வுரிமை இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு நிறுவன தலைவர் பெரு.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தங்கேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.

இதில் மாநில நிர்வாகிகள் அருள்தாஸ், கோதண்டம், அண்ணாமலை, கன்னியப்பன், பாபு, ரவிசங்கர், முரளிதரன், செல்வம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மீனவ சமுதாயத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளின் கல்வி செலவை ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும்.

மீனவர்கள் மீன்பிடி தொழிலின் போது உயிரிழந்து விட்டால், அந்த குடும்பத்துக்கு அரசு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அன்னிய நாட்டு படகுகள் இந்திய எல்லை பகுதியில் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும். மேலும் சுருக்குமடி வலைக்கான தடையை அரசு நீக்கி, தமிழக மீனவர்கள் நலன் காக்க வேண்டும்.

மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.110 கோடி போதுமானதாக இல்லை.

இந்த தொகையை உயர்த்தி தரமான மீன்பிடி துறைமுகம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற ஜனவரி மாதம் 10-ந்தேதி அனைத்து மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story