விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 8 அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முகாம்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் 12-ந் தேதி வாக்கு சேகரிப்பு


விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 8 அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முகாம்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் 12-ந் தேதி வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2019 4:45 AM IST (Updated: 8 Oct 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி தொகுதியில் 8 அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டுள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வருகிற 12-ந் தேதி வாக்கு சேகரிக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி முடிவடைந்தது. கடந்த 3-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் என 12 பேர் களத்தில் உள்ளனர். இவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், பாண்டியராஜன், செங்கோட்டையன், கருப்பண்ணன், அன்பழகன், சேவூர் ராமச்சந்திரன், நிலோபர் கபில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கொறடா ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் முகாமிட்டு அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் கிராமங்களில் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இதேபோல் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, டி.ஆர்.வி. ரமேஷ், எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், கிருஷ்ணசாமி, முன்னாள் மேயர் சுப்பிரமணியன், கட்சி நிர்வாகிகள் விக்கிரவாண்டியில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கனிமொழி எம்.பி. தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். இதுதவிர சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் சார்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்து மக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளனர்.

அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 12, 16 மற்றும் 18-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகை தந்து அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதேபோல் துணை முதல்-அமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வருகிற 13, 14, 17-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்கிறார்.

இதுதவிர பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் விக்கிரவாண்டி தொகுதிக்கு வந்து கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து மக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளனர்.

மேலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், உடல்நிலை குணமடைந்து சமீபத்தில் நடந்த திருப்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார். இதனால் தற்போது நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் பிரசாரம் செய்ய வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேமலதா விஜயகாந்தும் விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதேபோல் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 12, 13 மற்றும் 18, 19-ந் தேதிகளில் 4 நாட்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பிரசாரம் செய்கிறார். 14, 15-ந் தேதிகளில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

மேலும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று (புதன்கிழமை) பிரசாரம் செய்கிறார். இதுதவிர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் பிரசாரம் செய்கின்றனர். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகிற 11, 12, 17-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு அக்கட்சியின் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதனால் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகை தர இருப்பதையொட்டி அக்கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Next Story