விமான நிலையத்தில் போலி டிக்கெட்டுடன் வந்த பட்டதாரி வாலிபர் கைது


விமான நிலையத்தில் போலி டிக்கெட்டுடன் வந்த பட்டதாரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2019 3:00 AM IST (Updated: 8 Oct 2019 9:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையத்தில் போலி டிக்கெட்டுடன் வந்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னைக்கு தனியார் விமான சேவை நடந்து வருகிறது. இந்த விமான சேவையை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக பயணிகள் பலர் விமான நிலையத்திற்கு வந்து இருந்தனர். அப்போது அவர்கள் டிக்கெட் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் டிக்கெட் பரிசோதனை செய்பவர்களிடம் ஒருவர் தனது செல்போனை காட்டி அதில் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்கெட் இருப்பதாக கூறினார். அதை ஆய்வு செய்த போது, அந்த நபர் செல்போனில் காட்டிய டிக்கெட் போலியானது என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர் அவரை பிடித்தனர். பின்னர் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை சேர்ந்த செல்லத்துரை மகன் செல்வின் ஸ்டேன்லி (வயது 35) என்பதும் கடந்த 2011–ம் ஆண்டு வரை பசுவந்தனையில் பிரவுசிங் சென்டர் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் விமானத்தில் செல்ல ஆசைப்பட்டதால் போலி டிக்கெட் தயார் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து புதுக்கோட்டை போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வின் ஸ்டேன்லி எம்.காம் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story