கும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் கல்லறை மீது பிணமாக கிடந்த லாரி டிரைவர்; சாவில் சந்தேகம் இருப்பதாக கிராம மக்கள் போராட்டம்


கும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் கல்லறை மீது பிணமாக கிடந்த லாரி டிரைவர்; சாவில் சந்தேகம் இருப்பதாக கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2019 4:45 AM IST (Updated: 8 Oct 2019 10:41 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே மனைவியின் கல்லறை மீது லாரி டிரைவர் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறி கிராம மக்கள் சுடுகாட்டை முற்றுகையிட்டு 4 மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கொண்டமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). லாரி டிரைவர். இவருக்கும் கரடிபுத்தூர் கிராமத்தை சேர்ந்த அம்பிகா (35) என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

சிவகுமாரின் மனைவி அம்பிகா உடல் நலக்குறைவால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்தார். அவருக்காக கரடிபுத்தூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் கல்லறையும் கட்டப்பட்டு உள்ளது.

சிவகுமாருக்கும் அவரது மனைவியின் உறவினர்களான சுலோக்சனா, கமல், நாகராஜ், முருகன் ஆகியோருக்கும் இடையே நகை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மேற்கண்ட நபர்கள் தன்னை அடித்ததாக கடந்த மாதம் 21-ந்தேதி பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் சிவகுமார் புகார் மனு அளித்து இருந்தார். பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்றுகாலை கரடிபுத்தூர் சுடுகாட்டில் உள்ள தனது மனைவியின் கல்லறையின் மீது சிவகுமார் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது.

இதை-னையறிந்த கரடிபுத்தூர் கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள், சிவகுமாரின் பிணம் கிடந்த சுடுகாட்டிற்கு திரண்டு வந்தனர். அங்கேயே ஒரு துணி பந்தல் அமைத்து அவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுடுகாட்டில் பிணமாக கிடக்கும் சிவகுமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது புகார் மனுவை போலீசார் முறையாக விசாரணை நடத்தி இருந்தால் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டிருக்காது என புகார் கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர்

மேலும், சிவகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாதிரிவேடு போலீசார் எடுத்துச்செல்லவும் கிராம மக்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் கரடிபுத்தூர் சுடுகாட்டிற்கு நேரில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் சிவகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர் தான் மற்ற நடவடிக்கைகள் குறித்து முறையாக விசாரணை நடத்திட முடியும். எனவே அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

இதனையடுத்து தங்களது 4 மணி நேர போராட்டத்தை கைவிட்டு அனைவரும் சுடுகாட்டில் இருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் தலைமையில் பாதிரிவேடு போலீசார் சிவகுமாரின் மரணத்தை சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story