கோடியக்கரை கடற்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை


கோடியக்கரை கடற்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 9 Oct 2019 4:45 AM IST (Updated: 9 Oct 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் அழுகிய நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கி கிடந்தது. கப்பலில் அடிபட்டு இறந்ததா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சித்தர்கட்டம் புனித நீராடும் கடற்கரைக்கு சற்று மேற்கே அழுகிய நிலையில் திமிங்கலம் கடல் நீரில் மிதந்தபடி கிடந்தது. நேற்று பகல் 12 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து இதுகுறித்து ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கோடியக்கரை வனச்சரக அலுவலர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி தலைமையில் வனவர்கள் மற்றும் ஊர் பிரமுகர் சித்திரவேலு மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

கப்பலில் அடிபட்டு இறந்ததா?

அப்போது அங்கு அழுகிய நிலையில் திமிங்கலத்தின் உடல் கிடந்தது. சுமார் 15 முதல் 20 அடி நீளத்திற்குள் இருந்த திமிங்கலத்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த இடத்திலேயே கால்நடை மருத்துவரை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து கடற்கரை பகுதியில் பொக்லின் எந்திரம் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

அந்த திமிங்கலம் நடுக்கடலில் இருந்தபோது அந்த வழியாக சென்ற ஏதேனும் ஒரு கப்பல் அதன் மீது மோதி அதனால் அடிபட்டு திமிங்கலம் இறந்து இருக்கலாமா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story