கஜா புயல் நிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்


கஜா புயல் நிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Oct 2019 11:00 PM GMT (Updated: 8 Oct 2019 7:03 PM GMT)

கஜா புயல் நிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி தஞ்சை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சேதுபாவாசத்திரம்,

அரசு வழங்கிய கஜா புயல் நிவாரணத்தொகை தற்போதைய விலைவாசிக்கேற்ப வழங்கப்படவில்லை என்பது மீனவர்களின் குற்றச்சாட்டு ஆகும். புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு பதிலாக மீனவர்கள் புதிய படகுகளை வாங்குவதற்கு அரசு வழங்கிய நிவாரணத்தொகை போதவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கஜா புயலுக்கு பின்னர் மீனவர்கள் பலர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இந்த நிலையில் புயல் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மீனவர் சட்ட முன்வரைவை கைவிட்டு தற்போதைய மீனவர் சட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும்.

மீனவர்கள் வேலை நிறுத்தம்

மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் படகுகளை பாதுகாக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பு படகுகளை நிறுத்தும் வகையில் முகத்துவாரங்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி முதல் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. மீனவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக விசைப்படகுகள் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தால் கடல் சார்ந்த தொழில் செய்பவர்கள் 4 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.


Next Story