சட்டமன்றத்துக்கு வராமல் வாட்ச் கடையில் உட்கார்ந்திருப்பார்: தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களை தேடி வருவார் - ரங்கசாமி மீது நாராயணசாமி தாக்கு


சட்டமன்றத்துக்கு வராமல் வாட்ச் கடையில் உட்கார்ந்திருப்பார்: தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களை தேடி வருவார் - ரங்கசாமி மீது நாராயணசாமி தாக்கு
x
தினத்தந்தி 9 Oct 2019 5:00 AM IST (Updated: 9 Oct 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்றத்துக்கு வராமல் வாட்ச் கடையில் உட்கார்ந்திருப்பார், தேர்தல் நேரத்தில் மட்டும்தான் ரங்கசாமி மக்களை தேடி வருவார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக சூரியகாந்தி நகரில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது வைத்திலிங்கம் எம்.பி., தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பிரசாரத்தின்போது முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதி மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். அவர்கள் வெற்றிபெற்றால் ஆட்சி மாற்றம் என்கிறார், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி. புதுவையில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 16 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் பலம் 11 ஆகத்தான் உள்ளது. அதிலும் என்.ஆர்.காங்கிரசில் 7 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். அவர் கணக்கு தெரியாமல் ஆட்சி மாற்றம் என்கிறாரா? அல்லது மக்களை ஏமாற்ற அப்படிச் சொல்கிறாரா? அவர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறாரா?

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களை தேடி வருவார். நெல்லித்தோப்பு தொகுதி தேர்தலின்போது வீடுவீடாக சென்று ஓட்டுகேட்டார். தமிழக அமைச்சர்கள்கூட இங்கு வந்து தேர்தல் பணியாற்றினார்கள். ஆனால் 6 ஆயிரம் ஓட்டுகள்தான் வாங்கினார்கள். நாங்கள் 20 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்றோம். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போதும் ரங்கசாமி ஆட்சி மாற்றம் வரும் என்றார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி தனது சொந்த அக்காள் மகனை நிறுத்தினார். ஆனால் தி.மு.க. வேட்பாளரான வெங்கடேசன் வெற்றிபெற்றார். இந்த தேர்தலிலும் முன்பு அரைத்த மாவையே அரைக்கின்றனர். அவரது கட்சியில் உள்ளவர்கள் வேறு கட்சிக்கு ஓடி விடக்கூடாது என்பதற்காக ஆட்சி மாற்றம் என்ற தேனை தடவுகின்றார். தேர்தல் முடிந்தவுடன் வீட்டுக்கு சென்றுவிடுவார்.

சட்டமன்ற கூட்டம் நடக்கும்போதே வாட்ச் கடையில்தான் (கைக்கெடிகாரம்) உட்கார்ந்திருந்தார். அவரை எதற்காக மக்கள் தேர்வு செய்தனர்? ரங்கசாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்படவேண்டும். இல்லாவிட்டால் அந்த பதவியை ராஜினாமா செய்யவேண்டும். கம்பன் கலையரங்கில் தேர்தல்துறையின் அனுமதியை பெற்று மத்திய அரசின் பொருளாதார நிலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் காங்கிரஸ் வேட்பாளர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் குழம்பிப்போய் உள்ளன.

மாட்டு இறைச்சி எடுத்து செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்றுதான் இயக்குனர் மணிரத்தினம், ரேவதி போன்றவர்கள் கூறினார்கள். இதற்காக அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது.

இது மக்களின் பேச்சுரிமையை, சுதந்திரத்தை பறிக்கும் செயல். சர்வாதிகார நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story