கடைகள், தொழில் நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாட்டம்


கடைகள், தொழில் நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2019 4:15 AM IST (Updated: 9 Oct 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறிய, பெரிய கடைகள், தொழில்நிறுவனங்கள் உள்பட அனைத்திலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் நேற்று முன்தினம் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரியலூர் நகரில் உள்ள பெரிய அளவிலான டீக்கடைகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், தொழில்நிறுவனங்கள், ஆட்டோ, கார் மற்றும் வேன் நிறுத்தங்கள் போன்றவற்றில் ஒலிப்பெருக்கி, மா இலை தோரணங்கள் ஆகியவற்றை கட்டி, சுண்டல், பொரி, அவல் போன்ற பல்வேறு பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதேபோல பெட்டிக்கடைகள் போன்ற சிறிய கடைகளிலும் தங்களது வசதிக்கு ஏற்ப சுண்டல், பொரி, அவல் போன்ற பல்வேறு பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற வாகனங்களின் டிரைவர்கள் தங்களது வாகனங்களை தண்ணீரால் கழுவி, வாகனங்களின் முன்பக்கம் வாழைக்கன்றுகளை கட்டியும், மாலை அணிவித்தும், மா இலை தோரணங்கள் கட்டியும் வாகனங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சரஸ்வதி பூஜை

அனைத்து கடைகளிலும் சிறிய வாழைக்கன்றுகள் மற்றும் மா இலைகளால் தோரணங்கள் கட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசு போக்கு வரத்துக்கழகத்திற்கு சொந்தமான அனைத்து பஸ்களின் முன்பகுதியில் சிறிய வாழைக்கன்றுகளை கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வாகனங்கள் பழுது நீக்கும் கடைகளில் தினமும் பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தப்படுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். மேலும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு, உரிமையாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப ஊக்கத்தொகைகள் மற்றும் பிரசாதங்களை வழங்கினர். மேலும் ஏராளமான வீடுகளிலும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.

படையலிட்டு...

இதேபோல ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வாடகை ஆட்டோ, கார், வேன் நிறுத்தங்கள், மெக்கானிக் பட்டறைகள், மருத்துவமனைகள், மின்சாரவாரிய அலுவலகங்கள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடைகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், கலர் காகிதங்கள் ஓட்டப்பட்டு வாழைமரங்கள் நடப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டும் பொரிகடலை, பொங்கல், அவுல், கேசரி உள்ளிட்டவையுடன் பிரசாதங்களுடன் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. மேலும் வாகனங்களை கழுவி சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூ மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

சரஸ்வதி பூஜையையொட்டி வீடுகளில் பள்ளி குழந்தைகளின் பாட புத்தகங்களை வைத்து, அவல், பொரி, சுண்டல் ஆகியவற்றை சரஸ்வதிக்கு படையலிட்டு வழிபட்டனர்.

Next Story