பேரையூர் அருகே, மலை அடிவாரத்தில் புதைந்து கிடக்கும் முதுமக்கள் தாழிகள் - தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை


பேரையூர் அருகே, மலை அடிவாரத்தில் புதைந்து கிடக்கும் முதுமக்கள் தாழிகள் - தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2019 3:30 AM IST (Updated: 9 Oct 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

பேரையூர் அருகே கொப்பையசாமி கோவில் மலை அடிவாரத்தில் முதுமக்கள் தாழிகள் புதைந்து கிடக்கின்றன. எனவே அங்கு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரையூர், 

பேரையூர் அருகே உள்ளது கொப்பையசாமி கோவில். இந்த கோவில் மலை அடிவாரத்தில் உள்ளது. மேலும் அப்பகுதியை சுற்றிலும் விவசாய காடுகள் உள்ளன. இந்த காடுகள் நடுவே விவசாயம் செய்ய முடியாத இடத்தில் முதுமக்கள் தாழி உள்ளதாக ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் மற்றும் அங்கு உள்ள விவசாயிகள் கூறியுள்ளனர். அதன் பேரில் பேரையூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது, கொப்பையசாமி கோவில் மலை அடிவாரத்தில் தமிழர்களின் பண்பாடு கலாசாரத்தை பறைசாற்றும் முதுமக்கள் தாழி ஆங்காங்ேக தோண்டப்பட்ட நிலையிலும், அப்படியே புதைந்தும் கிடந்தன. ேமலும் சில இடங்களில் மணல் மேட்டை தோண்டி பார்த்தபோது முதுமக்கள் தாழி அருகருகே இருப்பதும் தெரியவந்தது. இதுதவிர அங்கு கற்குவியலும் காணப்படுகிறது.

முதுமக்கள் தாழி உள்ள இந்த பகுதியில் தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு செய்தால் இன்னும் ஏராளமான முதுமக்கள் தாழி கிடைக்கும் என்றும், அதன்மூலம் தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை அறிய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் பேரையூர் மொட்டமலை மீது உள்ள மல்லிகார்ச்சுனர் கோவில் அருகில் உள்ள பாறையில் பிராமி எழுத்து வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.950-ம் ஆண்டு காலத்தை சார்ந்தது, அந்த பிராமி எழுத்துகள் என்றும் ஏற்கனவே மதுரை தொல்லியல் துறையினர் கூறி இருந்தனர். இதுபோன்று பேரையூரை சுற்றிலும் பழமையான நாகரிகம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. தற்போது முதுமக்கள் தாழி ஏராளமானவை நிலத்தில் புதையுண்டு காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பண்டைய தமிழர் நாகரிகத்தை வெளிக்கொணர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொல்லியல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story