ராமநாதபுரத்தில் நவராத்திரி திருவிழா ராஜராஜேஸ்வரி அம்மன் சூரனை வதம் செய்தார்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவில் ராஜராஜேஸ்வரி அம்மன் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் ராமலிங்க விலாசம் அரண்மனையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் நவராத்திரி திருவிழா, மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகையை போல மன்னர்கள் காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவில் கவியரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், பொம்மலாட்டம், சிலம்பாட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் நிறைவாக நேற்று தசரா பண்டிகையையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
முன்னதாக ராமநாதபுரம் குண்டுக்கரை முருகன் கோவில், கன்னிகாபரமேஸ்வரி, முத்துராமலிங்க சுவாமி கோவில், கோதண்டராமர் கோவில், கோட்டைவாசல் விநாயகர் கோவில், முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோவில் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க சுற்றி வந்து அரண்மனை மற்றும் கேணிக்கரை பகுதிகளை அடைந்தது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உற்சவ மூர்த்திகள் வந்து சேர்ந்து வரிசையாக அணிவகுத்து நிற்க ராஜராஜேஸ்வரி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் அரண்மனை வாசலுக்கு வந்தடைந்தார். அங்கிருந்து மேளதாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க ரா ஜராஜேஸ்வரி அம்மன், உற்சவ மூர்த்திகள் முன்னால் அணிவகுத்து செல்ல அரண்மனையில் இருந்து புறப்பட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு நிற்க பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர்.
இந்த ஊர்வலம் வரும் வழியில் ராஜராஜேஸ்வரி அம்மன் உள்பட உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு இடங்களில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அரண்மனை, சிகில்ராஜவீதி, கேணிக்கரை வழியாக உற்சவ மூர்த்திகளுடன் சென்ற ராஜராஜேஸ்வரி அம்மன் மகர்நோன்பு திடலை சென்றடைந்தார். அங்கு அம்மன் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் சூரனை அம்பு எய்து வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் வாணவேடிக்கைகளின் சத்தம் விண்ணை எட்டியது.
விழாவில், ராமநாதபுரம் மன்னர் ராஜாகுமரன்சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார் உள்பட நகர் முக்கிய பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை ராணி பிரம்ம கிருஷ்ண ராஜராஜேசுவரி நாச்சியார் ஆலோசனையின்படி சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையில் தேவஸ்தானத்தினர் செய்திருந்தனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story