தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2019 4:30 AM IST (Updated: 9 Oct 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 1368 கனஅடியும், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து 2,500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தர்மபுரி மேல்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மெய்யழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையினால் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையினால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஏரி, குளம், குட்டை, கால்வாய் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஆற்றின் கரையோரம் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நின்று செல்பி எடுப்பது மிகவும் அபாயகரமானது. மழையின் அளவு மேலும் வலுப்பெறும் நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர் நிலைகள் பக்கம் செல்லாதவாறு பார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொடியாளம் ஏரி மற்றும் கெலவரப்பள்ளி அணை ஆகியவற்றை பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஏரி, அணையில் ரசாயன கழிவுகள் கலந்த நீர் நுரையுடன் வருகிறது. இந்த நுரை நீரால் விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாக்டீரியா இருப்பதால் இந்த நீரை குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது. இந்த நுரை நீர் மாதிரியை, ஆய்வுக்கு அனுப்பி, அதன் முடிவு வந்தபின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனிடையே, கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதால், சுற்றியுள்ள ஆவலப்பள்ளி, சித்தனபள்ளி, தட்டனபள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அணை பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story