ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு


ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Oct 2019 4:00 AM IST (Updated: 9 Oct 2019 3:26 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. மழைக்காலத்தில் காய்ச்சல் பாதிப்பு பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் இணைந்து டெங்கு விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் புதுச்சத்்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு காய்ச்சல் பாதிப்புடன் பொதுமக்கள் வருகின்றார்களா? என்று கேட்டறிந்ததுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வைக்கப்பட்டு உள்ள விவரப்பலகைகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நோயாளிகளுக்காக சிறப்பு பிரிவு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளதையும், அங்கு நோயாளிகளுக்கு வழங்குவதற்காக நிலவேம்பு கசாயம், கஞ்சி மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் ஆகியவை வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். ராசிபுரம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் கலைச்செல்வி மற்றும் மருத்துவர்களுடன் காய்ச்சல் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பிரிவு குறித்தும், காய்ச்சலுக்கு பின் தொடர் கண்காணிப்பு சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு பிரிவுகளையும், அங்கு நோயாளிகளுக்கு வழங்குவதற்காக நிலவேம்பு கசாயம், கஞ்சி வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் தேன்மொழி மாவட்ட கலெக்டரிடம் கூறும்போது, இங்கு ஆண், பெண், குழந்தைகளுக்கு தனித்தனியே காய்ச்சல் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இரண்டு நாட்களுக்கு மேலும் காய்ச்சல் குணமாகாதவர்களை காய்ச்சல் சிறப்பு பிரிவில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது, என்றார்.

Next Story