மஞ்சூரில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மஞ்சூரில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மஞ்சூர்,
மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எடக்காடு, கிண்ணக்கொரை, பெங்கால்மட்டம், எமரால்டு, தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் இயங்கி வந்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு அந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது மஞ்சூர் அருகில் உள்ள பிக்கட்டி பகுதியில் மட்டும் மதுக்கடை இயங்கி வருகிறது. இதற்கிடையில் மஞ்சூரில் மதுக்கடை திறக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பெண்கள் உள்பட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மஞ்சூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் பிரதான சாலையோரத்தில் உள்ள தனியார் கட்டிடத்தில் மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மதுக்கடை திறக்க உள்ள இடத்தில் தேவாலயம், குடியிருப்புகள் உள்ளன. மேலும் மக்கள் நெருக்கடி மற்றும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். அங்கு மதுக்கடை திறக்கப்பட்டால் மதுப்பிரியர்களால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே மதுக்கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story