மாவட்ட செய்திகள்

ரெயில் மோதி பள்ளி மாணவன் பலி + "||" + School student killed in train collision

ரெயில் மோதி பள்ளி மாணவன் பலி

ரெயில் மோதி பள்ளி மாணவன் பலி
திருப்பூரில் ரெயில் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
திருப்பூர்,

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது 2-வது மகன் ரகு நந்தகுமார் (வயது 16). இவன் திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். தினமும் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.


இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக மாணவன் ரகுநந்தகுமார் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வந்த பாலக்காடு பயணிகள் ரெயில் எதிர்பாராதவிதமாக மாணவன் ரகு நந்தகுமார் மீது மோதியது.

இதில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு அவரது உடல் இழுத்து செல்லப்பட்டது. மேலும், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.