அரியலூர் மேம்பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


அரியலூர் மேம்பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 4:15 AM IST (Updated: 9 Oct 2019 8:56 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மேம்பாலப்பணி விரைந்து முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரியலூர்,

அரியலூர்-பெரம்பலூர் செல்லும் சாலையில் அரியலூர் ரெயில் நிலையம் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

பாலப்பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ஆனால், இணைப்பு சாலைகள் அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. கடந்த மாதம் சட்டமன்ற மனுக்கள் குழு இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தது. அப்போது பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என்றனர். ஆனால், இன்றுவரை அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் இணைப்பு சாலை அமைக்கும் பணிக்காக சிலர் தங்களது நிலத்தை கொடுக்காமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று காரணம் கூறப்படுகிறது.

விரைந்து முடிக்கப்படுமா?

தற்போது பாலத்தின் இருபுறமும் மண்மேடு அமைக்கப்பட்டுள்ளது. கடுமையான சிரமத்திற்கு மத்தியில் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பாலத்தின் இருபுறமும் சென்று வருகின்றனர். அரசு மருத்துவமனை அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து பாலத்தின் மறுபுறம் கேபிள் மூலமாக மின்சாரம் எடுத்து செல்லப்படுகிறது. அந்த மின்சார கேபிளுக்கு இடையேதான் இரு சக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பாலப்பணி முழுமையாக முடிவு பெறாததால் பொதுமக்கள் அதிகளவு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே, இந்த பாலப்பணியை விரைந்து முடிக்கவும், பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்களை அகற்றி போக்குவரத்துக்கு திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story