ஊட்டி தாய்-சேய் நல மையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க வேண்டும் - கர்ப்பிணிகள் கோரிக்கை


ஊட்டி தாய்-சேய் நல மையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க வேண்டும் - கர்ப்பிணிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2019 3:45 AM IST (Updated: 9 Oct 2019 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாய்-சேய் நல மையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க வேண்டும் என்று கர்ப்பிணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ரெயில் நிலையம் எதிரே அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தொற்றா நோய்கள் மற்றும் நோய் தடுப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் ஊட்டி நகராட்சி தாய்-சேய் நல மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை சேர்ந்த கர்ப்பிணிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை பெற்று வருகின்றனர்.

மேலும் ஊட்டியில் வசித்து வரும் வெளிமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் அங்கன்வாடி மையங்களில் கர்ப்பம் தரித்தவுடன் பதிவு செய்து தாய்-சேய் நல மையத்தில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு ரத்தம், சிறுநீர், தைராய்டு, குளுக்கோஸ் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கர்ப்பிணிகளுக்காக நவீன ஸ்கேன் எந்திரம் உள்ளது. மேலும் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளின் எடை கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல் சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகள் தினமும் சாப்பிட டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்ப்பம் உறுதி செய்த 12 வாரத்திற்குள் பதிவு செய்திருந்தால் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 3-ம் மாதம் முடிந்த பிறகு ரூ.2 ஆயிரம் மதிப்பு உள்ள முதல் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும். கர்ப்ப கால சேவைகள் குறைந்தபட்சம் 2 முறை பெற்றிருந்தால் ரூ.2 ஆயிரம், 4-ம் மாதம் முடிந்த பின்னர் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் உள்பட 5 தவணைகளாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

ஆனால் ஊட்டி நகராட்சி தாய் சேய் நல மையத்தில் மருத்துவ பரிசோதனை மற்றும் சேவைகள் பெற்று வரும் கர்ப்பிணிகளில் பலருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் முதல் தவணை தொகை, 2-ம் தவணை தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அரசின் நிதியுதவியை பெற முடியாமல் உள்ளனர். இதுகுறித்து கர்ப்பிணிகள் கூறியதாவது:-

உரிய முறையில் பதிவு செய்து பிக்மி எண் பெற்று உள்ளோம். மேலும் ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் வழங்கப்பட்டு உள்ளது. நாங்கள் கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ அதிகாரியிடம் ஊட்டச்சத்து பெட்டகம் குறித்து கேட்டால், இன்னும் ஊட்டச்சத்து பெட்டகம் வரவில்லை. அதனால் இருப்பு இல்லை. வந்தவுடன் கொடுத்து விடுவோம் என்கின்றனர். இதனால் அடிக்கடி அலைக்கழிக்கப்படுகின் றனர்.

அந்த பெட்டகத்தில் ஊட்டச்சத்து மாவு 1 கிலோ, இரும்புச் சத்து திரவம் 3 பாட்டில்கள், உலர் பேரீச்சம் பழம் 1 கிலோ, புரதச்சத்து பிஸ்கட் 500 கிராம், ஆவின் நெய் 500 மில்லி, ஆல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை ஒன்று, ஒரு துண்டு இருக்கும். மேற்கண்ட ஊட்டச்சத்து பொருட்கள் கர்ப்ப காலத்தில் வழங்கப்பட்டால்தான் தாயும், குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருக்க முடியும். குழந்தை பெற்ற பின்னர் வழங்கினால் குழந்தைக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்க முடியாது. எனவே தாய்-சேய் நலன் கருதி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நிதியுதவி வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story