பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி; கோடிக்கணக்கான நகை, பணம் தப்பியது


பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி; கோடிக்கணக்கான நகை, பணம் தப்பியது
x
தினத்தந்தி 9 Oct 2019 11:15 PM GMT (Updated: 9 Oct 2019 6:36 PM GMT)

பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் புகுந்த மர்ம ஆசாமிகள், வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்காமல் திரும்பி சென்றதால் கோடிக்கணக்கான பணம் மற்றும் நகை தப்பியது.

காமநாயக்கன்பாளையம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் பல்லடம் - தாராபுரம் மெயின்ரோட்டில் பாரத ஸ்டேட் பாங்க் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு கிளை மேலாளர் உள்பட 9 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று வழக்கம்போல் வேலை நேரம் முடிந்ததும் வங்கி அலுவலர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

அதை தொடர்ந்து வங்கிக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், வழக்கம் போல் நேற்று காலை 10 மணிக்கு அலுவலர்கள் வங்கிக்கு வேலைக்கு சென்றனர். பின்னர் வங்கியின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது ஏ.டி.எம்.எந்திரம் நகர்த்தப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் அதன் அருகில் சென்று பார்த்தபோது எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் வங்கியின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டும், வங்கியை சுற்றி உள்ள சுற்றுச்சுவர் மீது அமைக்கப்பட்டு இருந்த முள் கம்பிவேலி அறுக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து வங்கி மேலாளர் சிவராமகிருஷ்ணன் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு முருகவேல், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் வங்கியில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகையை சேகரித்தனர். பின்னர் திருப்பூரிலிருந்து போலீஸ் மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது வங்கி வளாகத்தினுள்ளேயே சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. அது யாரையும் பிடிக்கவில்லை.

வங்கியை சுற்றி உள்ள சுற்றுச்சுவர் முள்வேலியை அறுத்த ஆசாமிகள், வங்கியின் ஜன்னல் கம்பியையும் அறுத்து வங்கிக்குள் நுழைந்து முதலில் ஏ.டி.எம்.எந்திரத்தை நகர்த்தி, அதை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் ஏ.டி.எம்.எந்திரத்தை முழுவதுமாக உடைக்க முடிய வில்லை. இதனால் அதில் இருந்த பணம் தப்பியது. மேலும் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்தால் அபாய மணி ஒலிக்க தொடங்கி விடும் என நினைத்த ஆசாமிகள் பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்காமல் வந்த வழியாக திரும்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கான பணம், நகை தப்பியது.

இதையடுத்து வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும், வங்கியின் எதிரே உள்ள தொழிற்சாலையின் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும், மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். வங்கியில் நகைகடனுக்காக வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான நகைகள், மற்றும் இருப்பு பணம் ஆகியவை பாதுகாப்பு பொட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது பாதுகாப்பாக உள்ளது என்று வங்கி கிளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோடிக்கணக்கான நகைகள், மற்றும் இருப்பு பணம் ஆகியவை உள்ள இந்த வங்கியில் காவலாளி நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story