இடைத்தேர்தல் தேவையில்லாமல் வந்துள்ளது - ரங்கசாமி வேதனை


இடைத்தேர்தல் தேவையில்லாமல் வந்துள்ளது - ரங்கசாமி வேதனை
x
தினத்தந்தி 9 Oct 2019 11:15 PM GMT (Updated: 9 Oct 2019 7:41 PM GMT)

காமராஜ் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேவையில்லாமல் வந்துள்ளது என்று ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கவிக்குயில் நகரில் வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் கணேசன், பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அப்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சராக உள்ள நாராயணசாமி எந்த திட்டத்தையும் புதிதாக கொண்டு வரவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் செயல்படவில்லை என்று கூறுகிறார். நான் யாரையும் எதிரியாக நினைத்தது இல்லை. புதுவையில் அரசியல் கட்சிகள் எப்போதும் எதிரியாக செயல்பட்டது கிடையாது. என்ன திட்டங்களை கொண்டுவந்தோம் என்று கூறி வாக்குகளை சேகரிக்கவேண்டும்.

எதிர்க்கட்சிகளை குறைகூறுவது, அதிகாரம் தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்வது இப்படித் தான் ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசும், கவர்னரும் தடையாக உள்ளனர் என்கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த என்ன செய்துள்ளர்கள்? நாங்கள் அனைத்து துறைகளுக்கும் நிதியை ஒதுக்கி செலவு செய்தோம். அதனால்தான் புதுச்சேரி வளர்ச்சி பெற்றது.

10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப்போவதாக கூறினார்கள். ஆனால் ஆயிரம் பேருக்குக்கூட வேலை கொடுக்கவில்லை. நல்ல மருத்துவ வசதிகூட இல்லை. அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் வசதியில்லாததால் தனியாருக்கு செல்ல கூறுகிறார்கள்.

இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டதால் தேவையில்லாமல் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆட்களா இல்லை. மத்திய அரசையும், கவர்னரையும், எதிர்க்கட்சிகளையும் குறைகூறும்போக்குதான் முதல்-அமைச்சரிடம் எப்போதும் உள்ளது.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

புதுவையில் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ரங்கசாமிதான் முதல்-அமைச்சராக வர மக்கள் நினைக்கின்றனர். மக்கள் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டியதுதான் அரசியல்வாதிகளின் செயல். முதல்-அமைச்சரான நாராயணசாமி இப்போதும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவே செயல்படுகிறார்.

அவர் தனது செயல்படாத தன்மையை மறைக்க எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசிவிட்டு புதுவை வந்து அவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கின்றார்.

காங்கிரஸ் ஆட்சியில் 19 மாதத்துக்கான இலவச அரிசி வழங்கப்படவில்லை. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது? சிறு சிறு காரணங்களை கூறி பணத்தை சுரண்டி எடுத்து சென்றுவிட்டார்கள்.

ரங்கசாமி ஆட்சியில் அனைவருக்கும் இலவச துணி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் வழங்கப்படவில்லை. அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் அதை செயல்படுத்தாமல் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். புதிதாக குப்பை வரியை கொண்டு வந்து குடிநீர் கட்டணம், சொத்து வரிகளை உயர்த்தி உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஹெல்மெட்டுகளை வடமாநிலத்தில் இருந்து வாங்கி வந்து ஒரே நாளில் விற்று தீர்த்தவர் ஜான்குமார். ஹெல்மெட்டுகளை விற்றபின் பழியை கவர்னர் மீது போட்டுவிட்டு கட்டாய ஹெல்மெட் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

புதுவையில் முதல்-அமைச்சராகவும், பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் இருந்து வளர்ச்சியை கொண்டுவந்தவர்தான் ரங்கசாமி. இந்த தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் ரங்கசாமியை விமர்சிக்கக் கூடாது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story