மோடியின் பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார்: “தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது” - நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
“பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது“ என்று நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நெல்லை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் தொகுதிக்கு உட்பட்ட சீவலப்பேரி பகுதியில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
2-வது நாளான நேற்று காலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம், சிவந்திப்பட்டி பகுதிகளில் கிராமமக்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.
நொச்சிகுளம் கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அங்குள்ள மக்கள் தங்களது ஊர் குளம் கடைமடை பகுதி குளம் என்பதால் கால்வாயில் தண்ணீர் திறந்தாலும் தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே, குளத்தை நிரப்பி விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பகுதி மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதேபோல் கிருஷ்ணாபுரத்தில் மரத்தடியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து மக்களை சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் சார்பில், கிருஷ்ணாபுரத்தில் சிறப்பு வாய்ந்த வெங்கடாஜலபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. சாக்கடை வசதி, சுகாதார வசதியை மேம்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து சிவந்திப்பட்டி கிராமத்தில் மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாங்குநேரி தொகுதியில் வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு நமது கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
நாங்குநேரி தொகுதி மக்கள், மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பக்க பலமாக இருந்து உள்ளர்கள். இந்த பகுதியில் தொடர்ந்து தி.மு.க.வுக்கு ஆதரவு இருக்கிறது. இங்கு விவசாயிகள் அதிகமாக இருக்கிறீர்கள். விவசாயிகள் வாழ்வில் மேம்பாடு அடைய ரூ.7 ஆயிரம் கோடி கடனை கருணாநிதி தள்ளுபடி செய்தார். விவசாயிகளை மேம்படுத்த பல திட்டங்களை தந்தார். ஆனால் தற்போது விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெண்கள் சொந்த காலில் நிற்க சுய உதவிக்குழுக்களை தொடங்கி சுழல் நிதி, மானியம், வங்கிக்கடன் போன்றவற்றை வழங்கினார். ஆனால், இன்று சுய உதவிக்குழுக்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து உள்ளது. சென்னையில் பேனர் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ என்ற பெண் பலியானார். பொள்ளாச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, வீடியோ பதிவு செய்து மிரட்டி வந்துள்ளனர். இதில் ஆளுங்கட்சி பிரமுகரின் மகனும் சம்பந்தப்பட்டு உள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மக்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். இதற்கு காரணம், உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதுதான். உள்ளாட்சி தேர்தல் நடத்தி, பிரதிநிதிகள் இருந்தால் அவர்கள் அந்தந்த கிராம மக்களின் தேவையை அறிந்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பார்கள். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் இதைப்பற்றி கவலைப்படவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. எதிர்க்கட்சியான நாங்கள் கிராமம், கிராமமாக சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து அவற்றை அதிகாரிகளிடமும், சட்டசபையிலும் எடுத்துக்கூறி நிறைவேற்றி வருகிறோம். தி.மு.க. ஆட்சி விரைவில் அமைய இருக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வைவிட அ.தி.மு.க. 1.1 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே அதிகமாக பெற்று உள்ளது. அதனால் அவர்கள் ஆட்சியை பிடித்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார். பதவி பறிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ஆவியோடு பேசியதாக கூறி, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறினார். பின்னர் துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்த பிறகு அதை மறந்து விட்டார்.
தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற ஒரே வேலை மட்டும்தான் உள்ளது. ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் விலகினாலே ஆட்சி கலைந்து விடும். அதனால் ‘கமிஷன், கரப்ஷன், கலக்ஷன்’ என்று செயல்பட்டு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்து உடன் வைத்திருக்கிறார்கள்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை பணிகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கமிஷன் பெற்று ஆட்சி நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். மோடியின் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் தமிழுக்காகவே போராட வேண்டிய நிலை உள்ளது. இதை தீர்க்க மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இடைத்தேர்தல் வந்துள்ளது. இதில் நீங்கள் வெற்றியை தர வேண்டும்.
நாங்கள் தேர்தலுக்கு மட்டும் வருபவர்கள் கிடையாது. தேர்தலில் வெற்றி பெற்ற உடன் நன்றி சொல்ல வருவோம். வேட்பாளருடன் நானும் வருவேன். கடந்த சட்டசபை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை தந்தது போல், இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காலையில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பிஷப் பங்களாவுக்கு சென்றார். அங்கு பிஷப் ஜே.ஜே.கிறிஸ்துதாசை சந்தித்து ஆசி பெற்றார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பரப்பாடி காமராஜ், வி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர் மாலையில் நாங்குநேரி தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, கீழக்கருவேலன்குளம், சடையமான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் கூறுகையில் “கருணாநிதி இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினார். களக்காடு பகுதியில் பச்சையாறு அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்தினார். அவரது ஆட்சியில் தொடங்கி வைத்த தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு திட்டத்தை தற்போது உள்ள அ.தி.மு.க. அரசு சரியாக செயல்படுத்தவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் நாங்குநேரி, ராதாபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், இந்த திட்டத்தை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவோம்.
அ.தி.மு.க. குட்கா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி இருப்பதால், மத்திய அரசின் கைப்பாவையாக, தலையாட்டும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.
இந்தி, சமஸ்கிருதத்தை திணித்தாலும் தமிழை புறக்கணித்தாலும் தமிழர்களின் நலனுக்கு எதிராக எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை அ.தி.மு.க.வினர் ஏற்றுக்கொள்வதற்கு இதுவே காரணம். எனவே மத்திய, மாநில அரசுக்கு பாடம் புகட்ட ரூபி மனோகரனை வெற்றி பெறச் செய்யுங்கள்“ என்றார்.
அவருடன், ஞானதிரவியம் எம்.பி., மைதீன்கான் எம்.எல்.ஏ., காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாட்ஷா, ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், த.மு.மு.க மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உள்பட பலர் சென்றனர்.
ஆட்டோவுக்கு வழிவிட சொன்ன ஸ்டாலின்
களக்காடு புதிய பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் மு.க.ஸ்டாலின் திறந்த ஜீப்பில் நின்று பிரசாரம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது, அந்த வழியாக உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அவசரமாக அழைத்து சென்றனர். ஆட்டோ கூட்டத்தை நோக்கி வந்ததை கண்ட மு.க.ஸ்டாலின் ஆட்டோவுக்கு வழிவிடுமாறு கூறினார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அந்த ஆட்டோவுக்கு வழிவிட்டனர்.
Related Tags :
Next Story