விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி


விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 9 Oct 2019 10:30 PM GMT (Updated: 9 Oct 2019 8:29 PM GMT)

விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

திண்டுக்கல், 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள அரகண்டன்நல்லூரை சேர்ந்த சாரதி (வயது 26), நெடுங்கபட்டு கிராமத்தை சேர்ந்த யோனாசாத்ராஜ் (26), விருதுநகர் பாண்டியன்நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி (48) ஆகியோர் குடும்பத்தினருடன், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபர் மோசடி செய்து விட்டதாக கூறி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபர், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு நண்பர் ஒருவர் மூலம் எங்களுக்கு அறிமுகம் ஆனார். அப்போது உலக நாடுகளுக்கு விமானத்தில் பொருட்களை அனுப்பும் நிறுவனம், கனடாவில் செயல்படுவதாக தெரிவித்தார். அந்த நிறுவனத்துக்கு ஏற்கனவே பலரை வேலைக்கு அனுப்பி இருப்பதாகவும், மேலும் சிலர் வேலைக்கு தேவைப்படுவதாகவும் கூறினார்.

வெளிநாட்டில் வேலை செய்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று நினைத்தோம். இதையடுத்து விழுப்புரம், விருதுநகர் மற்றும் சென்னையை சேர்ந்த 7 பேரை கனடாவுக்கு அனுப்புவதாக உறுதிஅளித்தார். இதற்கு விசா மற்றும் இதர ஆவணங் களை தயார் செய்வதற்காக பல தவணையாக பணம் வாங்கினார். அதன்பேரில் நாங்கள் 7 பேரும் தலா ரூ.4 லட்சம் கொடுத்துள்ளோம். மேலும் பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் போன்றவற்றையும் வாங்கி கொண்டார்.

இதைத் தொடர்ந்து கனடாவில் இயங்கும் நிறுவனத்தின் பெண் அதிகாரியை சந்திக்க வேண்டும் என்று கூறி, டெல்லிக்கு எங்களை அழைத்து சென்றார். அங்கு அறை எடுத்து தங்க வைத்தார். ஆனால், அவர் குறிப்பிட்ட பெண் அதிகாரி அங்கு வரவில்லை. இதனால் ஐதராபாத்துக்கு அழைத்து சென்றார். அங்கும் யாரும் எங்களை சந்திக்கவில்லை. மேலும் விசா மற்றும் வேலைக்கான ஆணை எதுவும் பெற்றுத் தரவில்லை.

ஆனால், ஒருசில நாட்களில் கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். எனினும், 1½ ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணம் மற்றும் பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றை கேட்ட போது அதையும் திரும்ப தராமல் ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story