விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு


விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
x
தினத்தந்தி 10 Oct 2019 4:30 AM IST (Updated: 10 Oct 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

பொள்ளாச்சி, 

வேளாண்மை பொறியியல் துறை மானாவாரி மேம்பாட்டு திட்டம் மூலம் வேளாண்மை உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் வகையில் மரச்செக்கு எண்ணெய், சிறு தானியங்கள் மாவு அரைக்கும் எந்திரங்கள் வாங்குவதற்கு பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் அன்னம் காய்கறிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எந்திரங்கள் வாங்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு அன்னம் காய்கறிகள் உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

அட்மா திட்ட வட்டாரத்தலைவர் ஆர்.ஏ. சக்திவேல் வரவேற்றுப் பேசினார். விழாவில் சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு எந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் விவசாயிகள் போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர். விவசாயிகள் விவசாய உப தொழில்கள் செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும். விவசாயிகள் மட்டும் தங்கள் உற்பத்தி விளைப்பொருட்களை கிடைத்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. விவசாயிகளுக்கு காலமுன்னேற்றம் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி விவசாயிகளே விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் காலம் விரைவில் வரும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிப்படையில் ஒரு விவசாயி ஆவார். அதனால் அவர் எந்த நேரத்திலும் விவசாயத்தில் என்னென்ன மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். பொள்ளாச்சி வடக்கிபாளையம் பகுதியில் பெய்யும் மழைநீர் அனைத்து வீணாக கேரளா கடலில் கலக்கிறது. இதனை தடுக்கும் வகையில் வடக்கிபாளையம் பகுதியில் 9 தடுப்பணைகள் கட்ட ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது.

சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்-அமைச்சர் இன்னும் 2 மாதங்களில் பி.ஏ.பி பாசனத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அறிவித்துள்ளார். இதற்காக கேரள மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் தமிழகத்துக்கு வருவார். கோவை. திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பி.ஏ.பி. பாசனப் பகுதியில் காற்றாலை, கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பட்டியவில் இருந்து நீக்கப்படும். விடுபட்டுள்ள நிலங்கள் பாசன வசதி ஏற்படுத்தப்படும். இதில் வடக்கிபாளையம் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கிடைக்கும். இவ்வாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், தாசில்தார்கள் தணிகைவேல் (பொள்ளாச்சி), சங்கீதா (கிணத்துக்கடவு), அன்னம் காய் கறிகள் உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குனர்கள் ஜெயஅழகன், மோகன்குமார், பொள்ளாச்சி தெற்கு அ.தி.மு.க. துணைச்செயவாளர் தனசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story