தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சென்னம்மாள் கோவிலில் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு


தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சென்னம்மாள் கோவிலில் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 4:15 AM IST (Updated: 10 Oct 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக டி.அம்மாபேட்டையில் உள்ள சென்னம்மாள் கோவிலில் தண்ணீர் புகுந்ததால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

அரூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 2,047 கனஅடி தண்ணீரும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 1,120 கனஅடி தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கே.ஆர்.பி., கெலவரப்பள்ளி அணைகளில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஈச்சம்பாடி, மல்லமாபுரம், டி.அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரூர் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிலில் தண்ணீர் புகுந்தது

இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அரூர் அருகே உள்ள டி.அம்மாபேட்டை சென்னம்மாள் கோவிலில் தண்ணீர் புகுந்தது. இதனால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவிர்த்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.


Next Story