நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருமங்கலத்தில் கடையடைப்பு
வீடு, கடைகளுக்கான வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலத்தில் நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் நகராட்சியில் வீடு, கடைகளுக்கு வரி உயர்வு, பாதாள சாக்கடைக்கு கட்டண உயர்வு உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே வீடு, கடைகளுக்கான வரி உயர்வு, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டண உயர்வு, சாக்கடை கழிவுகளை எந்திரம் கொண்டு அகற்றாமல் ஊழியர்களை கொண்டு அகற்றுதல் உள்ளிட்டவற்றிற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கதிரேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காளிதாஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். காங்கிரஸ் நகர தலைவர் தாமோதிரன், ம.தி.மு.க. நகர செயலாளர் அனிதாபால்ராஜ், கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சுப்புகாளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் முத்துக்குமார், ஜாகீர், வைரவன், இன்குலாப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின்போது வீடு, கடைகளுக்கான வரி உயர்வு, பாதாள சாக்கடை, குடிநீர் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும், பாதாள சாக்கடையை ஊழியர்களின்றி எந்திரத்தை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், மதுரை, விருதுநகர், உசிலம்பட்டி சாலைகளில் கழிப்பறை கட்ட வேண்டும், பஸ் நிலையம் பின்புறம் இருசக்கர வாகன நிறுத்தமிடம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த தர்ணா போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கடையடைப்பு காரணமாக திருமங்கலம் நகரின் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story