நீலகிரியில் 7 பேர் பாதிப்பு: டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்


நீலகிரியில் 7 பேர் பாதிப்பு: டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:15 PM GMT (Updated: 10 Oct 2019 4:47 PM GMT)

நீலகிரியில் 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஊட்டி,

நீலகிரி மலை மாவட்டம் என்பதாலும், குளிர்பிரதேசம் என்பதாலும் ஏ.டி.எஸ். கொசுக்கள் உற்பத்தியாவது இல்லை. ஆனாலும் நீலகிரி மாவட்ட மக்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏ.டி.எஸ். கொசு மற்றவர்களை கடிக்கும்போது அவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இவ்வாறு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தடுப்பு பணி மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கொசு வலையுடன் கூடிய 9 படுக்கைகள் உள்ளன. மர்ம காய்ச்சலால் சிகிச்சைக்கு வருகிறவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக கோவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதுகுறித்து நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு பின்னர் ஊட்டி, நெல்லியாளம், கூடலூர் ஆகிய பகுதிகளில் 7 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களை ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து 7 பேர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர்கள் நேரடியாக சென்று டெங்கு காய்ச்சல் பரவாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளியிடங்களுக்கு சென்று வருகிறவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் கூடலூர் அருகே பு‌‌ஷ்பகிரி, பாடான்துரை ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story