டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தஞ்சை அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு


டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து தஞ்சை அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Oct 2019 4:15 AM IST (Updated: 11 Oct 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவ பரிசோதனைகள் ஆகியவை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து ராசா மிராசுதார் மருத்துவமனை கட்டிட அறைகள் மற்றும் வளாகத்தை பார்வையிட்ட கலெக்டர் மருத்துவமனை வளாகம் தூய்மையாக இருக்கிறதா? என்பது குறித்தும், டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகிறதா? என்பது குறித்தும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.

மருத்துவ வசதிகள்

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நான்கு கருவுற்ற தாய்மார்களும், இரண்டு குழந்தைகளும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருவது தெரியவந்துள்ளது. மருத்துவமனை கட்டிட அறைகள் மற்றும் வளாகம் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு ஒழிப்பு பணி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் காலை அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரவீந்திரன், டாக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story