புதுக்கோட்டையில் மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்


புதுக்கோட்டையில் மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 11 Oct 2019 4:30 AM IST (Updated: 11 Oct 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் தூயமரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இங்கு எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர் ஒருவர் ‘ரெக்கார்டு’ நோட்டு எழுதாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் அந்த மாணவரை ஆசிரியர் அருளானந்தம் என்பவர் பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி

இதில் மாணவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாத மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து மாணவரின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் பணியிடை நீக்கம்

இதுபற்றி கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி ராகவனை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, துறைரீதியான விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் ஆசிரியர் மாணவரை தாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவரை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் அருளானந்தம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளி தாளாளருக்கு மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆசிரியர் அருளானந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


Next Story