கரூரில் உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு


கரூரில் உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 10:30 PM GMT (Updated: 10 Oct 2019 7:41 PM GMT)

கரூரில் நடந்த உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

கரூர்,

நாகரிக உலகில் வேலைப்பளு, குடும்ப பிரச்சினை, பொருளாதார பற்றாக்குறை உள்ளிட்டவற்றை சமாளிக்க முடியாமல் ஒருவித மனநோய்க்கு பலர் ஆளாகி வருகிறார்கள். தூக்கமின்மை, பசியின்மை, எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவையே மனநோயின் அறிகுறிகள் ஆகும். இந்தநிலையில் உலக மனநல தினத்தையொட்டி கரூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்.

மன அழுத்தத்தை கைவிட வேண்டும், விளையாட்டு-யோகா போன்றவற்றின் மூலம் மனவலிமையை அதிகப்படுத்த வேண்டும், மது அருந்துவது, போதைப்பொருள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் சர்ச் கார்னர், திண்ணப்பா கார்னர், கரூர் பஸ் நிலையம், ஜவகர் கடைவீதி வழியாக சென்று பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சான்றிதழ்களை வழங்கினார்.

துண்டு பிரசுரம்

முன்னதாக மனநோயாளிகளையும் சக மனிதர்களாக மதித்து அவர்களுடன் சகோதரத்துவத்துடன் பழகி, அவர்களையும் அன்பால் அரவணைத்து வழிநடத்த வேண்டும். அன்பு அனைத்து நோய்களுக்கும் குணமளிக்கக்கூடிய அற்புத மருந்து. எனவே, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கோபப்படாமலும், அவர்களை துன்புறுத்தாமலும் அன்போடு பேசி சமாதானப்படுத்தி சிகிச்சை அளித்து குணமாக்க முயற்சி செய்ய வேண்டும். மனச்சிதைவு மற்றும் மூளை தேய்மான நோய்களை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, தாந்தோன்றிமலை அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி செந்தில்குமார், சாந்திவனம் மனநலக் காப்பக மருத்துவர் ராமகிரு‌‌ஷ்ணன், தாசில்தார் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story