ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து மறியல்; தள்ளுமுள்ளு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை கண்டித்து மறியல் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கீழ ரத வீதி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு களுக்கு செல்லும் படிகளை அகற்றினர்.
மேலும் அகற்றப்பட்ட கட்டிட இடிபாடுகள் அந்தந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் முன்பு குவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. படிக்கட்டுகளை இடிக்கத்தொடங்கினார்கள். ஏற்கனவே இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்றாமல் மீண்டும் அதே பணியை தொடங்கியதற்கு அந்த பகுதியை சேர்ந்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தி.மு.க.வை சேர்ந்த தேரடி மாரியப்பன் தலைமையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும், படிக்கட்டுகளை அகற்றக்கூடாது என கோஷங்களை எழுப்பினர். மறியல் நடைபெற்ற கீழ ரத வீதி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் இதயம் போன்ற பகுதி ஆகும். மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் வரிசையாக நின்றன. மறியல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு வாகனம் மீறி செல்லும்போது மறியலில் ஈடுபட்டவர்கள் அந்த வாகனத்தை செல்லக்கூடாது என்று தடுத்தனர். அப்போது அங்கிருந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
Related Tags :
Next Story