மாவட்ட செய்திகள்

தாராபுரத்தில் இலவச வீட்டுமனை கேட்டு சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை + "||" + Asking for free housing Siege of Sub-Collector's Office

தாராபுரத்தில் இலவச வீட்டுமனை கேட்டு சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தாராபுரத்தில் இலவச வீட்டுமனை கேட்டு சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை
தாராபுரத்தில் இலவச வீட்டு மனை கேட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
தாராபுரம், 

திருப்பூர் மாவட்டம் மூலனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சில குடும்பத்தினர் வீடு கட்டுவதற்கு இடமில்லாமல், ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பங்களாக வசித்து வருகிறார்கள்.

இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால், அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பல வருடங்களாக விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை அந்த குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மூலனூர் பஸ் நிலையம் அருகே உள்ள, அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனைக்கு இடம் ஒதுக்கித் தரவேண்டும் எனக்கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-

மூலனூரை சுற்றியுள்ள சேசையன்பாளையம், சானார்பாளையம், புதுக்கோட்டை, அறிவொளிநகர், அருள்ஜோதிநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் குடியிருப்பதற்கு வீடு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அனைவரும் கூலித்தொழிலாளர்கள்.

வாடகை வீட்டில் வசிக்கிற அளவிற்கு, எங்களிடம் பொருளாதார வசதி இல்லை. இதனால் 3 தலைமுறைக்கு முன்பு எங்கள் முன்னோர்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டுமனையில், ஒரு வீட்டில் 3 அல்லது 4 குடும்பங்கள் சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம்.

இதனால் போதிய இடவசதி இல்லாமல், சுகாதாரகேடு ஏற்பட்டு, தொற்று நோய்களால் அவதிப்படுகிறோம். வயதான நோய்வாய்பட்ட முதியவர்களை படுக்க வைக்கக்கூட இடமில்லாமல் சிரமப்படுகிறோம்.

வீடு இல்லாத குடும்பத்தினர் இலவச வீட்டுமனை கேட்டு கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மூலனூர் பஸ் நிலையம் அருகே பனந்தோப்பு, சுண்ணாம்பு காட்டுவலசு, உடையார்பாளையம் உள்ளிட்ட 8 இடங்களில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன.. இந்த நிலத்தில் இலவச வீட்டுமனைக்கு இடம் ஒதுக்கித்தர முடியும். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

எனவே வீடு இல்லாத ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த சில குடும்பங்கள், பனந்தோப்பு என்ற இடத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் வரும் 21-ந்தேதி குடிசைபோட்டு குடியேறுவது என்று முடிவு செய்துள்ளோம். இந்த நிலையில் இலவச வீட்டுமனை உடனே வழங்க வேண்டும் என கோரி தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்று கூறினார்கள்.

தகவல் அறிந்த அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். மனுவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க தாமதம் ஏற்படும் பட்சத்தில், திட்டமிட்டபடி அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடிசைபோட்டு குடியேறுவோம் என்பதை தெரிவித்திருந்தனர். அதையடுத்து முற்றுகையை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.