மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் - 1,422 பேர் கைது + "||" + In Playankottai Electricity Board contract workers blocked the road 1,422 arrested

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் - 1,422 பேர் கைது

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் - 1,422 பேர் கைது
பாளையங்கோட்டையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 1,422 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை, 

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நேற்று மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 2007-ம் ஆண்டு வரை பணிபுரிந்து விடுபட்ட மற்றும் ஐகோர்ட்டு வழக்கு பட்டியலில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்தப்படி ஏற்றுக்கொண்ட குறைந்தபட்ச ஊதியம் ரூ.380 வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பி மக்கள் சேவையை மேம்படுத்த வேண்டும். மின்வாரிய பணியின்போது விபத்துக்குள்ளான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

நெல்லை மண்டலம் சார்பில் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் பீர்முகமது ஷா தலைமை தாங்கினார். தூத்துக்குடி செயலாளர் ராமையா, தூத்துக்குடி அனல்மின் நிலைய செயலாளர் கணபதி சுரேஷ், காற்றாலை பிரிவு செயலாளர் அந்தோணி கிளமெண்ட், குமரி மாவட்ட செயலாளர் செல்வதாஸ், உற்பத்தி பிரிவு செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில செயலாளர்கள் அப்பாத்துரை, வண்ணமுத்து, சந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது அவர்கள் திடீரென அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதில் மொத்தம் 2 பெண்கள் உள்பட 1,422 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீஸ் வாகனங்களில் ஏற்றி, அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்துக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.