கோவை விமானநிலையத்தில் ரூ.70 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் - இலங்கையில் இருந்து கடத்தி வந்த 5 பேர் கைது


கோவை விமானநிலையத்தில் ரூ.70 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் - இலங்கையில் இருந்து கடத்தி வந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2019 11:15 PM GMT (Updated: 10 Oct 2019 8:48 PM GMT)

இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.70 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டு பண்டல்கள் கோவை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை,

இலங்கையில் இருந்து கோவை வரும் விமானத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகள் பண்டல், பண்டலாக கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை விமானநிலையத்தில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

அப்போது கொழும்பு விமானத்தில் இருந்து வந்த முகமது அக்பர் அலி, அன்சார் அலி, அப்துல் காதர், கலந்தர் ஐதர் அலி மற்றும் சாகுல் ஹமீது ஆகிய 5 பேர் கொண்டு வந்த பார்சல்களை பிரித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது..

இதேபோல் அதே விமானத்தில் வந்த ஹசன் ரியாஸ், இஸ்மாயில் ஆகியோர் கொண்டு வந்த பைகளிலும் வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் இருந்தன. இவர்கள், 7 பேரிடம் இருந்தும் மொத்தம் 23,310 பாக்கெட்டு சிகரெட்டுகள் இருந்தன. அதில், 4 லட்சத்து 66 ஆயிரத்து 200 சிகரெட்டுகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.70 லட்சம்.

இந்த சிகரெட்டுகளை கடத்தி வந்த முகமது அக்பர் அலி, அன்சார் அலி, அப்துல் காதர், கலந்தர் ஐதர் அலி, சாகுல் ஹமீது ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள்.

பிடிபட்ட ஹசன் ரியாஸ், இஸ்மாயில் ஆகியோர் கடத்தி வந்த வெளிநாட்டு சிகரெட்டுகளின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு குறைவு ஆகும்.

எனவே சுங்க நடைமுறை சட்டப்படி அவர்கள் 2 பேர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் கைது செய்யப்படவில்லை.இந்தியாவில் தடை செய்யப்பட்ட பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story