தந்தையை மதுகுடிக்க அழைத்து சென்றதை கண்டித்த தனியார் நிறுவன கேஷியரை கொலை செய்த தாய்மாமன் கைது


தந்தையை மதுகுடிக்க அழைத்து சென்றதை கண்டித்த தனியார் நிறுவன கேஷியரை கொலை செய்த தாய்மாமன் கைது
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 8:49 PM GMT)

தந்தையை மது குடிக்க அழைத்து சென்றதை கண்டித்ததால் தனியார் நிறுவன கேஷியர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய தாய்மாமன் கைது செய்யப்பட்டார்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வேளாங்கண்ணி நகர் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் சசிதரன் (வயது57). இவர் மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் காலில் காயம் அடைந்த சசிதரன் வீட்டில் ஓய்வுஎடுத்து வருகிறார்.

இவருடைய மனைவி சுதா (47). இவர்களுடைய மகன் பிரசாந்த் (25) இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கேஷியராக பணியாற்றி வந்தார். இவரடைய தாய்மாமன் சுரேஷ் (45). லாரி டிரைவர். இவர் மேட்டுப் பாளையம் -அன்னூர் ரோடு நடூர் முனியப்பன்கோவில் வீதியில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் சுரேஷ் தினமும் மதுகுடிப்பதற்காக சசிதரனை அழைத்து சென்றதாக தெரிகிறது. இதை சுரேசின் அக்காவான சுதா கண்டித்துள்ளார். இது போல் நேற்றுமுன்தினமும் உடல்நிலை சரியில்லாத கணவரை ஏன் மதுகுடிக்க அழைத்து செல்கிறாய் என்று சுதா கேட்டுள்ளார். இதனால் சுதாவிற்கும், சுரேசிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது பற்றி சுதா, இரவு வீட்டிற்கு வந்த மகன் பிரசாந்திடம் கூறியுள்ளார். உடனே அவர், தாய்மாமா சுரேஷின் வீட்டிற்கு சென்று, ஏன் அப்பாவை தினசரி மது குடிக்க அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டு கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடை யே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாந்தின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து வலியால் துடித்த பிரசாந்த்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்- இன்ஸ்பெக்டர்கள் திலக், பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பிரசாந்்தை கத்தியால் குத்தி கொலை செய்த சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

Next Story