சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர், தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 725 பேர் கைது
சொத்துவரி உயர்வை கண்டித்து கோவையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 725 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கோவை மாநகராட்சியில் வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வீடுகளுக்கு 50 சதவீதமும் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளதையும், அதுபோன்று 24 மணி நேர குடிநீர் வினியோகம் செய்ய சூயஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதையும் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
ஆனாலும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் திரண்டனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய கட்சியினர் வந்ததால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் தடையை மீறி அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தி.மு.க.வை சேர்ந்த நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் பொங்கலூர் நா.பழனிசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது, தமிழக அரசு மற்றும் கோவை மாநகராட்சியை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும், சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரை கைது செய்து, வாகனங்களில் ஏற்றினார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 125 பெண்கள் உள்பட 725 பேரை போலீசார் கைது செய்து கோவையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
சூயஸ் நிறுவனத்திடம் போட்ட ஒப்பந்தம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சொத்துவரி உயர்வு மற்றும் சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி கோவை மாநகர பொருளாளர் சவுந்திரகுமார், கணபதி சிவக்குமார், முன்னாள் மேயர் வெங்கடாசலம், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், ஆடிட்டர் அர்ஜூனன், சேதுபதி, கணபதி செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் தேவராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது பஷீர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இலக்கியன், கொ.ம.தே.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.தனபால், தலைமை நிலைய செயலாளர் வடிவேல் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த கணபதி சம்பத்குமார், சுகுராம் ஜெகதீசன், முன்னாள் கவுன்சிலர் மாரிசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story